தற்போது கோடைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் வனப்பகுதிகளில் வாழும் வன உயிரினங்கள் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது அதிகமாகியுள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் இரவு நேரங்களில் அதிகளவில் வருவது வழக்கம்.
இந்நிலையில், கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் யானைகள் தண்ணீருக்காக கிராமங்களுக்கு வருவது அதிகரித்துவருகிறது. நேற்று மாலை ஆணைக்கட்டி பகுதியில் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி யானைகள் கூட்டம்கூட்டமாக வந்துள்ளன. இதில் குட்டி யானை உள்பட 9 யானைகள் கங்கா சேம்பர் என்ற இடத்தில் வந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்துச் சென்றன.
இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படாததே யானைகள் வருவதற்குக் காரணமென குற்றம்சாட்டிய பொதுமக்கள், போதியளவு தண்ணீரை தொட்டிகளில் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.