கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பள்ளி சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் 14ஆவது கேள்வியாக மூன்றாவது மொழி ஹிந்தி எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா அல்லது கை தொழில் ஒன்றை அடிப்படையாக கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா என்று அச்சிடப்பட்டுள்ளது. இது பெற்றோர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருட்டிணன், "தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மாணவர் சேர்க்கையை தொடங்கிய நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் தரப்படுகின்ற மாணவர்களுக்கான விண்ணபத்தில் 14ஆவது கேள்வியாக மூன்றாவது மொழி இந்தி எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா அல்லது கைத்தொழில் ஒன்றை அடிப்படையாக கற்றுக் கொள்ள விரும்பமா என்று அச்சிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறைப்படுத்தப்படும் மும்மொழிக் கொள்கை என்றும் ஏற்றுக் கொள்ளப்படாத என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்த நிலையில், தற்போது இதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டிருப்பது மறைமுகமாக மூன்றாவது மொழியாக இந்தி மொழியை தமிழ்நாடு அரசு கொண்டுவர விரும்புகிறதோ என்ற கேள்வி எழும்புகிறது.
அதுமட்டுமின்றி கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு கொண்டு வர இருக்கின்ற புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் கைத்தொழிலை அறிமுகப்படுத்த உள்ளார்களோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இதனை மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் நாளை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார் ஜடாவத் இது போலியானது என்றும் மாநகராட்சிக்கு தீய பெயர் விளைவிக்கவே இது போன்று யாரோ செய்துள்ளார்கள், இது போன்ற விண்ணப்பம் எதுவும் மாநகராட்சி சார்பில் தரபடவில்லை.
கரோனா காலத்தில் கூட்டம் சேரகூடாது என்பதற்காக கூகுள் மூலம் விண்ணப்பங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம். அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற தவறான செய்திகளை மக்களிடம் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய விண்ணப்பத்தை பள்ளியில் வாங்கிய மாணவி ஒருவரின் பெற்றோர் ஜீவானந்தம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிங்காநல்லூர் அரசு பள்ளியில் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்த பொழுது அதில் பதினான்காவது கேள்வியாக ஹிந்தி மொழி விரும்புகிறீர்களா என்று கேள்வி இருந்ததைக் கண்டு சற்று குழப்பம் அடைந்தேன்.
இதனை உறுதி செய்வதற்காக எங்களது வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டு மற்ற மாவட்டங்களில் ஏதேனும் இதுபோன்று உள்ளதா என்று கேட்டேன். யாரும் இது போன்ற மற்ற மாவட்டங்களில் இல்லை என்று தெரிவித்தனர்.
ஆகவே, கோவையில் மட்டும்தான் இதுபோன்று விண்ணப்பங்கள் அளிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக இன்று சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் விண்ணப்பத்தை பெற்ற பொழுது அதிலும் இதுபோன்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்று அறிவித்த நிலையில் பள்ளி சேர்க்கை விண்ணப்பங்களில் இதுபோன்று கேள்வி கேட்கப்பட்டது கண்டனத்திற்குரியது என்பதால் இதனை போராட்ட அறிவிப்பாக அறிவித்தோம்.
இந்த போராட்ட அறிவிப்பு செய்திகளில் ஒளிபரப்பான சில நிமிடங்களில் மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியிலும் சில முரண்பாடான கருத்துக்கள் உள்ளன. அதாவது, மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த விண்ணப்பம் போலியானது என்றும் இது நான் பதவியேற்ற பிறகு தரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
அப்படியானால் இது இதற்கு முன்னர் தரப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. மேலும், இது போன்ற போலியான ஆவணங்களைப் பரப்புபவர்கள் மீதும் வெளிக் கொண்டு சர்ச்சை ஏற்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மாநகராட்சி ஆணையர் வழக்கு தொடுத்தால் அதனை சந்திக்கவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: அலுவல் மொழி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் - உச்ச நீதிமன்றம்