கோயம்புத்தூர் மாவட்டத்தில் சில தினங்களாகவே கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டால் அல்லது முகக் கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறி வாடிக்கையாளர்கள் இருந்தால் அரசு அலுவலர்கள் அந்த கடைக்கு சீல் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களான உக்கடம் மீன் சந்தையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் ஷர்வன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். உக்கடம் மீன் மார்க்கெட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள், அங்கு மக்கள் அனைவரும் கண்காணிக்கப்படுகின்றனரா என்று ஆய்வு செய்தார்.
தற்போது அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டு அவர்களின் விவரங்களும் கண்டறியப்படுகின்றன. மீன் வாங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ள கூடாது. வியாபாரிகளும் மீன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனர்.