கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டத்தை தலமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு லாபம் தருவதாக கூறி கோடிக் கணக்கிலான ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில், கமல்வள்ளி மற்றும் மோகன்ராஜ் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை திருப்பூர் குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிதி நிறுவனத்தில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் 900 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்திருப்பதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் பாசி நிறுவனத்தின் உரிமையாளர்கள் கமலவள்ளி உள்ளிட்ட சிலரிடம், பணம் பறித்ததாக அப்போதைய மேற்கு மண்டல ஐஜியாக பணியாற்றிய பிரமோத் குமார் உள்பட 5 பேர் மீது சிபிஐ 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஐஜி பிரமோத் குமார் உட்பட 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ததுடன், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
இதனையடுத்து, குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் ஐஜி பிரமோத் குமார் தரப்பில் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பிரமோத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
முன்னாள் ஐஜி பிரமோத் குமாரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் மேல் விசாரணையை நடத்த உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து இந்த வழக்கு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (நவ. 23) மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் சேர்க்கப்பட்ட அனைவரும் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: “இது என்கவுண்டர் இல்லை..தற்காப்பு” - ரவுடி கொம்பன் ஜெகன் என்கவுண்டர் குறித்து திருச்சி எஸ்பி விளக்கம்!