கோவை: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று (டிச. 30) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உட்பட பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீப அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலி நிகழ்விற்காக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற மாற்றுத்திறனாளி பிரதமர் மோடியின் தாயார் படத்தை ஓவியமாக வரைந்திருந்தார். அந்த ஓவியத்தை சுற்றிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் தாயார் 100ஆவது வயதில் இறந்துள்ளார். அவரது இறப்பிற்கு, பாஜக மகளிர் அணி சார்பாக பிரதமர் மோடி மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.
பிரதமரின் தாயார் கடுமையான வாழ்க்கை பின்னணிகளை கொண்டு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து உன்னத தலைவரை நாட்டிற்காக கொடுத்து மிகப்பெரிய உத்வேகம். இந்திய பெண்மணியின் தவ வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்திய பெண்கள் அனைவரும் எளிமையான வாழ்க்கை வாழ்வதற்கு அவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாக உள்ளது. ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய பெண்களுக்கு தங்களுடைய வாழ்க்கை மூலமாக உயர்ந்த தலைவர்களை தவப்புதல்வர்களை கொடுக்க முடியும் என்றார்.
இதையும் படிங்க:ஹீராபெனுக்கு அஞ்சலி - மணற்சிற்பம் மூலம் அஞ்சலி செலுத்திய கலைஞர் சுதர்ஷன் பட்நாயக்