சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.25) கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,”கூட்டுறவு சங்கங்கள் சேவை மனப்பான்மையுடன் நியாய விலை கடைகளை நடத்தி வருகின்றன.
மேலும் விலையில்லாமல், அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்கின்றன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வழங்கப்படும் விளிம்புத் தொகையுடன், கூட்டுறவுச் சங்கங்கள் பொது விநியோக திட்டத்தினை செயல்படுத்துவதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யும் பொருட்டு,அரசால் மானியம் வழங்கப்படுகிறது.
2020-21ஆம் ஆண்டில் 400 கோடி ரூபாய் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பொது விநியோகத் திட்ட மானியமாக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.