கோயம்புத்தூர்: வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையிலும், நவம்பர் மாதம் தொடக்கம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நேற்று (நவ.9) இரவு பரவலாக கனமழை பெய்தது.
குறிப்பாக ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், பீளமேடு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், செல்வபுரம், வெள்ளலூர், உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனிடையே, கோவை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக நம்பர் 4 வீரபாண்டி பகுதி சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், அப்பகுதி முழுக்க வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
மேலும், ஆனைகட்டி பகுதியில் பெய்த மழை காரணமாக அப்பகுதியில் உள்ள சங்கனூர் ஓடையில், வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகிறது. சொன்னதடம்பட்டி ஏரி மற்றும் காலிங்கராயன் குளம், காட்டம்பட்டி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதில் சின்னவேடம்பட்டி ஏரிக்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதேபோல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தபடி உள்ளது.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் மூன்றாவது வீதியைச் சேர்ந்த 63 வயதான பழனிச்சாமி என்ற கூலித் தொழிலாளி, அங்குள்ள ஒரு கடையில் இரவு படுத்து உறங்கி உள்ளார். அந்த கடை புதுப்பித்துக் கட்டப்பட்டு வரும் நிலையில், தொடர் மழை காரணமாக கடையின் ஹாலோ பிளாக் சுவர் சரிந்து விழுந்ததோடு, தகரத்தாலான மேற்கூரையும் விழுந்தது.
இந்த இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை!