கோவை மாவட்டம் கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி தொடங்கியது. இந்தக் கண்காட்சி இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 160 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1,200 மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இக்கண்காட்சியை தமிழ்நாடு அரசின் அறிவியல் தொழில்நுட்ப குழு தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ”இந்த கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் சிறப்பான கண்டுபிடிப்புகள் அனைத்தும், தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் படைப்புகளை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கான வாய்ப்பாக இம்மாதிரியான கண்காட்சி அமையும்.
எனவே, தமிழ்நாடு அரசும் இதுபோன்ற கண்காட்சிகளை நடத்தி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் இக்கண்காட்சி, அவர்கள் எதிர்காலத்தில் தொழில் முனைவோராக மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
தமிழ்நாட்டு மாணவர்களின் கண்டுபிடிப்புகள் வெளிநாடுகள் மூலமாக விண்வெளிக்கு செல்ல வாய்ப்புள்ளது. சந்திரயான் 2 விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி அடுத்த கட்டத்தை அடையும்” என்றார்.