பொள்ளாச்சி: கோவையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த 22ம் தேதி இரவு கேடிஎம் டியூக் உட்பட இரண்டு இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. இருசக்கர வாகனத்தைத் திருடும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே கோவையில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தின் மூலம், திங்கட்கிழமை அன்று காலை பொள்ளாச்சி கடை வீதியில் பெண் ஒருவரிடம் இரு மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின்போது அப்பெண் நிலை தடுமாறியதில் கீழே விழுந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி வியாபாரிகள், காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததின் பேரில் அப்பகுதி காவல் நிலைய போலீசார், சி.சி.டி.வி காட்சிகள் வைத்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். பட்டப்பகலில் கடைவீதி பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இன்று அதிகாலை பொள்ளாச்சி பாலக்காடு இடையான மாநில நெடுஞ்சாலையில் உள்ள என்.ஜி.எம் காலேஜ் மேம்பாலம் அருகில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நபர்கள், சாலையில் இருந்த தடுப்புச் சுவரின்மீது மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் கோரமான முறையில் உயிர் இழந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், முன்னதாக பொள்ளாச்சி கடைவீதியில் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்மக்கும்பலில் ஒருவரான உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் விபத்தில் மரணமடைந்த மற்றொருவரை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் விபத்து நடந்த உடன் அங்கிருந்து தப்பிய நிலையில் அங்குள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தப்பிச்சென்ற நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதே கும்பல் தான் கோவையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடப்பட்ட வாகனத்தில், செயின் பறிப்பில் ஈடுபட்டு பின் சாலை விபத்தில் கோரமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Tenkasi:டாக்டர் வீட்டில் 102 சவரன் நகை கொள்ளையடித்த குடும்பம்: கூண்டோடு சிக்கியது எப்படி?