கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றம் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. அதில் ஒன்று ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோபாலபுரம் சாலை. இந்த வழியாக நீதிமன்றத்திற்குள் பலர் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று (பிப்.13) காலை 11 மணியளவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக வாய்தாவுக்கு வந்த 2 பேர் டீ குடிப்பதற்காக கோபாலபுரம் 2ஆவது வீதியில் உள்ள ஒரு பேக்கரிக்கு வந்தனர்.
அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் டீ கடையில் இருந்த இளைஞர்களை சரமாரியாக வெட்டினர். இதில், கழுத்தில் வெட்டப்பட்ட ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தடுக்க முயன்ற மற்றொரு இளைஞருக்கு தலை மற்றும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர், உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மற்றொரு இளைஞர், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து காவல் துறையினர், இந்த கொலைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் அப்பகுதியில் இருந்த தடயங்களைச் சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல் துறையினர், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையான நபர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பதும், படுகாயம் அடைந்தவர் சிவானந்தா காலனியைச் சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக நீதிமன்றம் வந்ததும், இவர்கள் மீது மதுரை மற்றும் கோவையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கொலையானவர் தற்காப்பிற்காக இடுப்பில் கத்தி வைத்திருந்ததும், முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனவும் தெரியவந்தது. இதனிடையே கொலை தொடர்பான ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அதில், காயமடைந்த மனோஜை கொலையாளிகள் கத்தியால் வெட்டுவதும், அதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுவதும் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 4 பேரும் நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். கோவையில் நேற்றிரவு (பிப்.12) சத்திய பாண்டி என்ற நபரை, ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்த நிலையில், மீண்டும் ஒரு கொலை சம்பவம் நடந்து இருப்பது அப்பகுதிவாசிகளை மேலும் அச்சம் அடைய செய்திருக்கிறது.
இதையும் படிங்க: சென்னையில் பத்திரிகையாளர்கள் எனக் கூறி கஞ்சா விற்ற இருவர் கைது!