கோவை மாவட்டம் சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் அப்பகுதியில் வசித்துவருகிறார். செல்வராஜ் தனது வீட்டிலேயே ஆடு மற்றும் நாய் வளர்த்து, அவற்றை விற்று தொழில் நடத்திவருகிறார். இந்நிலையில், அவரது வீட்டின் அருகே புதியதாக வீடு கட்டிய காவல் துறை அலுவலர் ஒருவர் ஆடு மற்றும் நாய் வளர்ப்பினால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், சுகாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் கூறி செல்வராஜை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் செல்வராஜ் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். அப்போது, திடீரென தான் மறைத்து கொண்டு வந்திருந்த பெட்ரோலை எடுத்து தனது பிள்ளைகள், மனைவி மற்றும் தன்மீதும் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து, கையிலிருந்த தீப்பெட்டி, பெட்ரோலை பிடுங்கி அவர்கள்மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து தகவலறிந்து வந்த பந்தய சாலை காவல் துறையினர் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டிவந்த காவல் துறை அலுவலர் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், காவல் துறை அலுவலர்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தால் தன்மீது தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற பயத்தில் தற்கொலை செய்ய முயன்றதாகவும் அவர் கூறினார். இது குறித்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.