கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கெளதம் கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதில் 65 வயதுள்ள சிறுநீரக மருத்துவர் ராமலிங்கம் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு செல்வபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் தனது தாயை சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, சிகிச்சைக்காக வந்த தனது தாயை விட்டுவிட்டு இளம் பெண்ணின் உடலை பரிசோதனை செய்வதுபோல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்குபதிவு செய்த போலீஸார் மருத்துவர் ராமலிங்கத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.