சித்திரை திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது . இந்நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகருக்கு சித்திரை திருநாளான இன்று 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள். தரிசனம் செய்து சென்றனர் .
மேலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. டன் கணக்கில் பழங்கள் மற்றும் காய்கறிகளைகொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த விநாயகரை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் .
இதே போன்று , காட்டூரில் அமைந்திருக்கும் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு, தங்கம் மற்றும் வைரத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வழிபட்டனர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு உள்ள சூழலில், கோயிலில் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்த மொத்த பணத்தின் மதிப்பை நிர்வாகிகள் கூற மறுத்தனர். இருப்பினும் ஆண்டுதோறும் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இந்த அம்மனுக்கு அலங்காரம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.