கோவையை அடுத்துள்ள காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தின் அருகில் இந்த தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை சட்டத் திருத்தம் நமது இந்தியாவிற்கு மிகவும் அவசியமானது. தேசவிரோத சக்திகள்தான் இதனை எதிர்த்து வருகின்றனர். நாட்டுக்கும் அதன் நலனுக்கும் பாதுகாப்புக்கும் எதிராக நின்று குரல் கொடுக்கும் இந்த தேசவிரோதிகளை பாஜக கடுமையாக கண்டிக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் இருக்கும் ஒருவருக்கு கூட எவ்வித பாதிப்பும் இல்லை. அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் இந்த போராட்டதைத் தூண்டிவிடுகிறது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி குறித்து எந்த புரிதலும் இல்லாமல் பலரும் போராடிவருகின்றனர். சமூகவிரோத சக்திகளின் தூண்டுதலின் பெயராலேயே பலரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த வேண்டுமானால் குடியுரிமை திருத்தச் சட்டமானது மிகவும் அவசியம். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி எதிர்ப்பு போராட்டங்களை ஊடகங்கள் ஊதிப்பெருசாக்குகின்றன. அவர்களின் அருவருக்கத்தக்க வார்த்தைகளை, முதலமைச்சர், பிரதமர் குறித்த அவதூறுகளை ஏன் இந்த ஊடகங்கள் மறைக்கின்றன. அதேபோல தமிழ்நாடு முழுவதும் தற்போது இந்த சட்டத்தை ஆதரித்து நடக்கும் போராட்டங்களை செய்தியாளர்கள் முழுமையாக விலக்கிக் காட்டுவதில்லை. அதனால்தான் சி.ஏ.ஏ., என்.ஆர்.சியை விளக்கி உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்க இந்த தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது” என்று கூறினார்.
இன்றைய உள்ளிருப்பு போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்தும், அதை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க : ‘தாமிரபரணி ஆற்றை வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும்’