கோயம்புத்தூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுகவினர் குறித்தும், அதிமுக பொதுச்செயலாளர் குறித்தும் விமர்சித்து வந்தார். அவரது விமர்சனங்களுக்கு அதிமுகவினரும் பதிலடி கொடுத்து வந்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறை சென்று வந்தவர் என அண்ணாமலை விமர்சித்தது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை குறித்து அண்ணாமலை பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலையின் இந்த கருத்தினால் ஆத்திரமடைந்த அதிமுகவினர், பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வர வேண்டும் என்ற அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்த துவங்கினர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பாஜகவுடன் கூடட்ணி இல்லை என வெளிப்படையாக அறிவித்தார். இதனையடுத்து இன்று (செப்.25) சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக..! அடுத்த திட்டம் என்ன..?
இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் பாஜக கூட்டணியில் அதிமுக தொடர வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் (National Democratic Alliance) இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, கோவையில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "அதிமுக-வின் அறிக்கையை படித்தோம். அதில் அவர்கள் ஒரு தீர்மானத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து எங்களுடைய தேசிய தலைமை பேசுவார்கள், சரியான நேரத்தில் பேசுவார்கள். நாங்கள் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது இது குறித்து பேசுவோம்" எனத் தெரிவித்தார்.
பின்னர், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்திருப்பது குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். தேசியத் தலைமை இந்த கூட்டணி குறித்து முடிவெடுக்கும்.
தேசியத் தலைமை அறிவிக்கின்ற வரை இதுகுறித்து நாங்கள் எந்த கருத்தும் வெளியிடுவதாக இல்லை என்றார். மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அண்ணாமலையின் கருத்து தான் காரணம் எனக் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து நாங்கள் எந்த கருத்தும் வெளியிடுவதாக இல்லை எனத் தெரிவித்தார்.
தேசியத் தலைமை இதுகுறித்து தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவிப்பு கொடுப்பார்கள், அப்பொழுது நாங்கள் எங்களுடைய கருத்தைத் தெரிவிப்போம். அவர்கள் சொன்ன கருத்துக்கள் ஆகட்டும், அவர்களுடைய முடிவுகள் ஆகட்டும், அதைப்பற்றி கருத்துச் சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றார்.
மேலும், கடந்த மூன்று தினங்களாக பாஜக முக்கியத் தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுப்பது குறித்த கேள்விக்கு, நான் இதே வார்த்தையைத் தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தேசியத் தலைமை இதுகுறித்து முடிவெடுக்கும் வரை நாங்கள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிப்பதாக இல்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நன்றி மீண்டும் வராதீர்கள்" பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக!