கோயம்புத்தூர்: கோவையின் முதல் தனியார் பேருந்து பெண் ஓட்டுநரான 23 வயது ஷர்மிளா பயணிகள் பேருந்தை திறம்பட ஒட்டி அசத்தி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரை பற்றியச் செய்திகள் இனையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
தந்தை ஓட்டுனராக இருந்து வரும் நிலையில் ஷர்மிளாவிற்கு வாகனம் ஓட்டுவது என்பது அலாதி பிரியமாக இருந்தது. இதனை அடுத்து அவரது தந்தை அவருக்கு ஓட்டுநர் பயிற்சி அளித்த நிலையில்,ஆட்டோ, மினி சரக்கு வாகனம், பேருந்து என அடுத்தடுத்து வாகனங்களை இயக்கி அனைத்து தரப்பினரின் கவனத்தையும் சர்மிளா பெற்றுள்ளார்.
தற்போது அவர் காந்திபுரத்தில் இருந்து கருமத்தம்பட்டி செல்லும் தனியார் நகர பேருந்தை ஓட்டி வருகிறார். ஏராளமானோர் அவருக்கு நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஷர்மிளா இயக்கும் தனியார் நகர பேருந்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த வானதி சீனிவாசன் ஷர்மிளாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இதையும் படிங்க: கோடை விடுமுறை முடித்து பள்ளி சென்ற மாணவர்கள் வேதனை.. வேலூரில் நடந்தது என்ன?
இந்த பயணம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், "கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்ற செய்தி வந்ததிலிருந்தே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என எண்ணிருந்தேன், இன்று நேரம் கிடைத்தவுடன் அதே பேருந்தில் பயணித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். பேருந்தில் பயணம் செய்து நீண்ட காலம் ஆன நிலையில் தற்போது மீண்டும் பேருந்தில் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெண் பேருந்து ஓட்டுநராக இருக்கும் பேருந்தில் பயணிப்பது மகளிர் அணி தலைவியாக பெருமிதமாக உள்ளது எனவும் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதை கூற வேண்டும் என்பது தான் தனது நோக்கமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
பின்னர், இது குறித்து பேசிய பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேருந்தில் வந்திருந்தது மிகுந்த ஆச்சரியம் அளித்ததாகவும் தன்னுடன் சிறிது நேரம் கலந்துரையாடி தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இரட்டைக்குழல் துப்பாக்கியாக அதிமுக - அமமுக செயல்படும்' - வைத்திலிங்கம்