கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவை கருமத்தம்பட்டி நகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (பிப்ரவரி 15) பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "நகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நிதியை முறையாகப் பயன்படுத்த பாஜகவினரைத் தேர்வுசெய்ய வேண்டும்.
மத்திய அரசு வழங்கும் பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு எளிதாகக் கிடைக்க பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பரிசுகள் வழங்கிவருகின்றனர். அதைப் பெற பெண்கள் போட்டிப் போட்டுக் கொள்கின்றனர். வாக்காளர்களுக்கு திமுக, அதிமுகவினர் வழங்கும் 300 ரூபாய் பரிசுப் பொருள்களைப் பெறுவதற்கு பெண்கள் நான்கு நாள்கள் வரை வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே காத்திருக்கின்றனர்.
இதனால் 2000 ரூபாய் வரை பெண்கள் சம்பளத் தொகையை இழக்கின்றனர். நேர்மையாக இருக்கும் பாஜக வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு தொல்லை கொடுக்கும் பாஜக - நாராயணசாமி குற்றச்சாட்டு