கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மக்கள் சேவை மைய அலுவலகத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசனை தமிழ்நாடு ஏகாத்துவ ஜமாஅத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் சந்தித்து பேசினார். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்லும் யாத்திரைக்கு ஆதரவு கோரினார்.
இதன் பின்னர் பா.ஜ.க துணை தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பா.ஜ.க.வில் முன்னாள் ஐ.பி.எஸ் அலுவலர் அண்ணாமலை இணைந்திருப்பது இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அண்ணாமலைக்கு பா.ஜ.க கட்சி அமைப்பு விதிமுறைகளை மீறி கூடுதலாக துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படவில்லை.
சில நேரங்களில் பா.ஜ.க அமைப்பு விஷயங்களில் விதி விலக்குகள் உண்டு. அண்ணாமலைக்கு துணை தலைவர் பதவி, விதிவிலக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு விதிகளை மாற்றம் செய்து கொள்வது குறித்து தலைவர் முடிவு செய்து கொள்ளலாம். இதில் ஒன்றும் தவறில்லை. அண்ணாமலையின் வரவு பா.ஜ.க.விற்கு கூடுதல் பலம் என கூறிய அவர் திறந்த மனதோடும், மனமகிழ்வோடு பா.ஜ.க குடும்பத்திற்கு வரவேற்று இருக்கின்றோம். அவருக்கு பணிகள் விரைவில் ஒதுக்கப்படும்.
எல்லா துணை தலைவர்களுக்கும் தனி தனியாக பணிகள் இருக்கும். புதியதாக யாராவது வந்தால் அதிகாரம் போய் விட்டது என யாரும் நினைக்க வேண்டியதில்லை. அரசியல் களத்தில் இருப்பவர்கள் தான் மக்களை சென்றடைந்து அவர்களுக்கு உதவ முடியும். அதிகாரத்திற்கு வர நினைத்து ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கினால், அதை தாங்கள் வரவேற்கின்றோம். அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும். வீரராக வந்த பின் யார் கேப்டன் என்பதை காலம் முடிவு செய்யும்'' என்றார்.
இதையும் படிங்க: ரவுடிகள் புகலிடமாக ஆகிறதா கமலாலயம்? சர்ச்சையைக் கிளப்பும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை!