கோவை கொடிசியா பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பழங்குடியினர் அணி கோவை மாநகர மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரத பிரதமர் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு என்றும் பாதுகாவலராக இருக்கிறார். வருகின்ற ஒரு வருடத்திற்குள் கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோவையில் உள்ள எஸ்டி மக்களுக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த இருக்கிறோம்.
கூட்டணி குறித்து தேசிய தலைமை அறிவிக்கும்
கூட்டணியை பொறுத்தவரை பாஜக மாநிலத் தலைவர் எவ்வித குழப்பமும் இல்லாமல் இருக்கிறார். முக்கிய முடிவுகளை தேசியத் தலைமைதான் அறிவிக்க முடியும் என்பதைத்தான் முருகன் சொல்லி இருந்தார். அதிமுக நண்பர்கள் இதைப் புரிந்துகொண்டு பேச வேண்டும். தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வரும்போது அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். புகழேந்தி போன்றோர் எங்கள் கட்சியின் தலைவர் குறித்து பேசும் போது பார்த்து பேச வேண்டும்” என்றார்.
பின்னர் நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுடன் இணைந்து அண்ணாமலை உற்சாகமாக நடனமாடினார்.
இதையும் படிங்க: 'பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும்' - விஜய் வசந்த்