கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் மத்திய அரசின் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தில் 60க்கும் மேற்பட்ட பெண்களுக்கான தையல் பயிற்சி முகாமை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.
இதில் பெண்களுக்குத் தையல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் ’குடியுரிமை திருத்தச் சட்டத்தை இஸ்லாமியர்கள் ஆதரிக்க வேண்டும். இதனைப்பற்றி மக்கள் முழுமையாகப் புரிந்துகொண்டு ஆதரவு தரவேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஒரு சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பெரிதுபடுத்தி எதிர்க்கட்சிகள் இஸ்லாமியர்களைத் தூண்டி விடுகிறார்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு இந்திய குடிமகனுக்குக்கூட பாதிப்பைக் கொண்டு வராத ஒரு சட்டம், இதைப் பலமுறை பிரதமர் மோடி அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் ஏன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களும் தெளிவுபடுத்தி உள்ளனர்.
மேலும் இஸ்லாமியர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை காவல்துறையினர் நடத்தியும் முடிவு இல்லை என்றால், தமிழ்நாட்டில் அரசியல் செய்ய ஒரு சில அரசியல் கட்சிகள் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தீனி போடுவதற்காக இந்தப் போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொள்கிறார்கள் என்கின்ற சந்தேகம் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கிறது' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து மாவட்ட அமைப்பாளர்களுடன் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ.வுக்கு எதிராகத் தொடரும் போராட்டம்