கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பாசி நிதி நிறுவனம், தங்கள் முதலீட்டாளர்களுக்கு இரு மடங்கு லாபம் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இவ்வழக்கில் கமலவள்ளி, மோகன்ராஜ் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருப்பூர் குற்றப்பிரிவு காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு பின் சிபிசிஜடி காவல் துறையினர் விசாரணை செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் 50,000க்கும் அதிகமான முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.900 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கமலவள்ளி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.171.74 கோடி அபராதம் விதித்து 2022ஆம் ஆண்டு கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: நடிகை மாயாவின் மகன் மரணம் முதல் ஏர்போர்ட் பயணிகள் பதற்றம் வரை சென்னை குற்றச் செய்திகள்!
இந்நிலையில், பாசி நிதி நிறுவன உரிமையாளர்கள் கமலவள்ளி உள்ளிட்ட சிலரிடம் பணம் பறித்ததாக தனியாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக முன்னாள் மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த பிரமோத்குமார், முன்னாள் டி.எஸ்.பி ராஜேந்திரன், காவலர் மோகன்ராஜ், இடைத்தரகர்கள் பிரபாகரன், செந்தில் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு கோவை மாவட்ட இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: கல்யாண வீட்டில் நடந்த கொலை..! அவிநாசியில் நடந்தது என்ன?
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஐ.ஜி பிரமோத்குமார் மற்றும் ஐந்து பேருக்கு எதிராக 2013ஆம் ஆண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு கடந்த அக்டோபர் 25ஆம் தேதி கோவை இரண்டாவது கூடுதல் சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அப்போது முன்னாள் ஐ.ஜி பிரமோத்குமார் ஆஜராகவில்லை. மற்றவர்கள் ஆஜராகினர். இதனால், முன்னாள் ஐ.ஜி பிரமோத்குமாருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கோவிந்தராஜன் முன்பு இன்று (அக்.27) விசாரணைக்கு வந்தது, அப்போது, முன்னாள் ஐ.ஜி பிரமோத்குமார் வழக்கு விசாரணைக்காக கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதனையடுத்து, நீதிபதி முன்னாள் ஐ.ஐி மீதான பிடிவாரண்டை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் ஐ.ஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், நவம்பர் 4ஆம் தேதி முன்னாள் ஐ.ஜி பிரமோத்குமார், அப்போதைய டிஎஸ்பி ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் பிரபாகரன், திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் பார் கல்லாப்பெட்டியில் திருடிய போலீசார்.. வைரலாகும் சிசிடிவி.. காவல்துறை நடவடிக்கை என்ன?