தமிழ்நாட்டில் வாழும் ஈழுவா தியா சமுதாய மக்கள், தங்கள் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் பட்டியலில் சேர்ப்பதற்காக தமிழ்நாடு அரசிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாநிலத்தில் வாழும் ஈழுவா தியா சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் பட்டியலில் தமிழ்நாடு அரசு சேர்த்தது.
இதற்கு அச்சமுகத்தை சேர்ந்த மக்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, வால்பாறை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கேரளா நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய கிருஷ்ணன் குட்டி, கேரளா மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, எங்கள் மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், மக்களின் சார்பிலும் அதிக அளவில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது என்றார்.
மேலும் தமிழ்நாட்டில் வாழும் ஈழுவா தியா சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் பட்டியலில் சேர்த்ததற்கு நன்றி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் செயல்படுத்துவதற்கு இரு மாநில அரசுகளும் முயற்சிகள் எடுத்துவருகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் பட்டியலில் சேர்க்கப்பட்ட தமிழ்நாட்டில் வாழும் ஈழுவா தியா சமுதாய மக்களுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களைச் சேதப்படுத்திய ஒற்றை யானை!