கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி கிராமம் அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாகப் படையெடுத்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம், ரேஷன் கடையை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த அரிசிகளை வெளியே எடுத்து சாப்பிட்டது. தொடர்ந்து, கிராமத்திற்குள் படையெடுக்கும் யானைகளால், விவசாயப் பயிர்கள் சேதமாவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட நிலையில், தற்போது ஒரு சில யானைகள் இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களில் புகுந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (நவ.23) அதிகாலை கரடிமடை அருகே உள்ள மங்களப்பாளையம் கிராமத்தில், குமார் என்பவரது விவசாயத் தோட்டத்திற்குள் யானைக் கூட்டம் புகுந்துள்ளது.
இந்த யானைகள் அதிகாலையில் தோட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளது. எனினும், தோட்டத்திற்குள் யானை பிளிறும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்துள்ளது. இதனை அடுத்து, அங்குச் சென்று பார்த்தபோது விவசாயத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பண்ணை குட்டையில் சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று சிக்கி இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து மதுக்கரை வனத்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மதுக்கரை வனச்சரகர் சந்தியா தலைமையிலான வனத்துறையினர் அதிகாலை 4.30 மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்து பண்ணை குட்டையில் சிக்கியிருந்த குட்டி யானையை ஜேசிபி உதவியுடன் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் அந்த குட்டி யானை விரட்டப்பட்டது.
இது குறித்து கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறுகையில், “இரவு நேரத்தில் யானைகள் கூட்டமாகத் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது தண்ணீர் குடிக்க குட்டி யானை ஒன்று மட்டும் தனியாக பண்ணை குட்டையில் இறங்கியபோது, அங்கிருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஜேசிபி வரவழைக்கப்பட்டு, யானை வெளியேறுவதற்காகப் பாதை அமைக்கப்பட்டு, அதன் வழியே குட்டி யானை வெளியே வந்து வனப்பகுதிக்குள் சென்றது" என்று தெரிவித்தார்.
மேலும், தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து துரிதமாக செயல்பட்டு குட்டி யானையைப் பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினருக்கு, பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு பாடத்திட்டம் குறைப்பு! - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!