கோவை: ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு, செல்போன் பறிப்பு, வழிபறி நடப்பதாக தொடர்ச்சியாக புகார் வந்தன. இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது பூமார்க்கெட் பகுதியில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் ஒரு முதியவரை சூழ்ந்து கொண்டு அவருக்கு தெரியாமல் பணம் மற்றும் செல்போனை திருடுவதை பார்த்த போலீசார் அவர்களது அருகில் சென்று 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகதூர் மகடோ (36), சந்தோஷ் (33), பப்லு மகடோ (23) மற்றும் பீகாரை சேர்ந்த மனிஷ்மகோலி (22), பீகாரை சேர்ந்த 15 சிறுவன், ஜார்கண்ட்டை சேர்ந்த 14 மற்றும் 10 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணையில் செய்ததில் 7 பேரும் விமானத்தில் கோவை வந்து அறை எடுத்து தங்கி டவுன் ஹால், உக்கடம், காந்திபுரம் மற்றும் புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பின் விமானம் மற்றும் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பின்னர் பணம் முழுவதும் செலவான பிறகு மீண்டும் சொந்த ஊரிலிருந்து கோவைக்கு திரும்பி திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 3 பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆவடி மாநகராட்சி கட்டடம்; அரசு அலுவலகமா? இல்லை அரசியல் கட்சி அலுவலகமா? - அதிமுகவினர் புகார்