கோயம்புத்தூர்: காட்டு யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்கு அனுப்பும் அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயம்புத்தூர் வனக் கோட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் சிறப்பாக பணியாற்றிய வேட்டை தடுப்பு காவலர்கள், பணியாளர்களுக்கு மாதந்தோறும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி இரண்டாவது முறையாக செப்டம்பர் மாதம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகளை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பிய வேட்டை தடுப்பு காவலர்கள், வனப் பணியாளர்கள், அதிவிரைவு மீட்புக்குழுவினர் 50 பேருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கும் நிகழ்ச்சி வட கோவையில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், வனத்திலிருந்து வெளியேறி பயிர்களை சாப்பிடும் யானைகளில் மூன்று விதமான யானைகள் உள்ளன.
இதுபோல் உள்ள யானைகள் கோயம்புத்தூர் வனக் கோட்டத்தை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதியில் அதிகமாக உள்ளன. இந்த யானைகளை விரட்டும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மேலும் ஊருக்குள் புகும் யானைகளை விரட்டுவதிலும், பாதுகாப்பதிலும் இந்தியாவிலேயே கோயம்புத்தூர் வனக் கோட்டத்தில் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்.
யானைகள் காட்டைவிட்டு வெளியே வந்தால் அதன் இயற்கைத் தன்மை மாறும், மருந்து தெளிக்கப்பட்ட பயிர்களை சாப்பிடுவதால் குணாதிசயம் மாறும் சூழல் ஏற்படும். யானைகள் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருப்பதாக தெரிந்தாலும் இந்த வகை பயிர்களை உண்ணும் யானைகள் நீண்ட நாட்கள் உயிர் வாழாது. சாப்பிடுவதற்காக காட்டை விட்டு வெளியே வந்தால் ஆபத்து அந்த யானைகளுக்குதான்.
அவ்வாறு வரும் யானைகள் 50 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை அவ்வாறு வரும் யானைகளை மிக கவனமாக வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியில் தங்களது உயிரை பணையம் வைத்து வனத்துறையினர் பணிபுரிகின்றனர். ஆனால் இவ்வாறு பணிபுரியும் வனத்துறையினர் மீது மக்கள் உரிய அங்கீகாரம் அளிக்காதது சிறிய வருத்தமாக இருந்தாலும், அதன் நிலை காலப்போக்கில் மாறும், என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உதவி வனப்பாதுகாவலர் தினேஷ்குமார் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் அறிமுகமானது மோட்டோவின் முழு அளவு திரை 5ஜி மடக்கு கைபேசி!