நாட்டிற்கு பொதுவாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டம், அனைவரும் சமம் என்ற கோட்பாட்டில் இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளுடன் பாகுபாட்டை உள்ளடக்கி இருந்தால் அது நியாயமாகுமா? அப்படியெனில் அதை நான் கொளுத்துவேன் என 1957ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி விடுதலை அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிட்டார்.
தந்தை பெரியார், தான் கடந்த 1926ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியது முதலே சாதி ஒழிப்பை முன்னிறுத்தி பல போராட்டங்களை நடத்தினார். இதன் தொடர்ச்சியாகத்தான் சாதியை பாதுகாக்கும் அரசியல் சாசன பிரிவுகள் 13, 25, 26,172 ஆகியவற்றைத் தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை 1957ஆம் ஆண்டு அறிவித்தார். அதன்படி, நவம்பர் மாதம் 26ஆம் தேதி, சாதியை ஆதரிக்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
73 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை நினைவு கூறும் விதமாக பெரியாரிய உணர்வாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் இருக்கும் பெரியார் சிலையின் முன்பு நடைபெற்றது.
சாதியை ஒழிக்க போராடியவர்களின் செயல் போற்றத்தக்கது என நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். சாதி ஆதரிக்கும் அரசியலமைப்பு சட்ட பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தில் சிறை சென்று, அங்கேயே உயிரிழந்தவர்களின் நினைவாக இந்நிகழ்வு நடைபெறுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.