கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ரங்கராயன் ஓடையைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் கனகராஜ் (22). இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கனகராஜூவும் அதே பகுதியைச் சேர்ந்த தர்ஷினி பிரியா என்பவரும் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். கனகராஜ் உயர் சாதிப்பிரிவைச் சேர்ந்தவர் என்றும், தர்ஷினி பிரியா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இருவரும் இருவேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜூவின் வீட்டில் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், காதல் ஜோடிகள் இருவரும் சிறுமுகை அருகே உள்ள வெள்ளிபாளையம் பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கனகராஜூவின் சகோதரர் வினோத் குமார் அரிவாளுடன் வந்து காதல் ஜோடியை அரிவாளால் சராமரியாக வெட்டினார். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், தர்ஷினி பிரியா ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் சாதியைக் காரணம் காட்டி தொடர்ந்து ஆணவக்கொலைகள் நடந்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.