கோவை மாவட்டம் அன்னூர் அதிகளவில் கிராமங்களையும் விவசாய நிலங்களையும் கொண்ட பகுதி. இங்கு கால்நடை வளர்ப்பு என்பது அதிகளவில் இருந்துவருகிறது. வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்பு என்பது இந்தப் பகுதிகளில் அதிகளவில் இருப்பதால் அவைகளை சந்தைப்படுத்தும் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் அன்னூரில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் அன்னூர் ஆட்டுச் சந்தையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே கூடிய இந்த ஆட்டுச் சந்தைக்கு அன்னூர், புளியம்பட்டி, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு வியாபாரமானது.
தலையில் அதீத முறுக்கு கொம்பு கொண்ட செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது. ஜந்தாயிரம் ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 35 ஆயிரம் வரை ஒரு ஆடு விலை நிர்ணயம் செய்து விற்பனையானது. இந்தச் சந்தையில் கோவை, திருப்பூர், நீலகிரி, கேரளா பகுதிகளிலிருந்து வந்திருந்தவர்கள் பக்ரீத் பண்டிகைக்காக அதிகளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
இதனால் இன்று ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தமுறை ஆடுகள் கொண்டுவரப்பட்டதால் இடம் பற்றாக்குறை காரணமாக சாலையோரங்களில் வைத்து ஆடுகள் வியாபாரம் செய்யப்பட்டது. எதிர்பார்த்த அளவைவிட களைகட்டிய ஆட்டுச் சந்தையில் அதிக லாபம் கிடைத்ததாக ஆடு வளர்ப்போர் தெரிவித்தனர்.