நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் கேக் வெட்டி, பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் சுங்கம் பகுதியில் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை தலைமையில் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது, "புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டை தவிற மற்ற மாநிலங்கள் ஆதரிக்கும்போது, தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை தொடரும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்தாகும்.
தமிழ்நாட்டு மக்கள் பலரும் மும்மொழிக் கொள்கை வேண்டும் என்கின்றனர். தந்தை பெரியார் தவிர்க்க முடியாத தலைவர், ஆனால் அவரது கொள்கைகள் அனைத்தையும் பாஜக அரசு ஏற்றுக் கொள்ளாது. மக்களுக்காக பாடுபட்ட பெரியாரின் ஒரு சில கொள்கைகளை ஏற்றுக் கொள்வோம். இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை நிலைபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு, நீட் தேர்வு குறித்த தவறான பிம்பம் அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யாவின் அறிக்கை லட்சுமண ரேகையை தாண்டும் வகையில் உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்த பின் சூர்யா அவரது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார்" என்றார்.
இதையும் படிங்க: நன்றி ரஜினிகாந்த்! - பிரதமர் மோடி ட்வீட்