கோயம்புத்தூர்: கடந்த 23ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்த சம்பவம் குறித்தான விசாரணையில், தற்பொழுது வரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்தான விசாரணை தற்போது NIA-விற்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்ததைத்தொடர்ந்து, கோவை மாநகரில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் கார்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கேட்பாரற்று நிற்கும் கார்களின் உரிமையாளர்களைத்தொடர்பு கொண்டு கார்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. உரிமையாளர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் காவல் துறையினர் அந்த கார்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக கேட்பாரற்றுக்கிடக்கும் இருசக்கர வாகனங்களையும் போக்குவரத்து காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். சதி வேலைகளுக்காக காரை பயன்படுத்தியது போல இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உக்கடம் பகுதியில் உள்ள மெக்கானிக் கடைகளிலும் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களையும் காவல் துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கோவை கார் வெடிப்பு திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல்' - ஆளுநர் ஆர்.என்.ரவி