சு.சீனிவாசன். கோவை
மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் திமுகவினர் வாக்கு கேட்பதாகவும் ,ஆனால் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியினை இந்த ஐந்து ஆண்டுகளில் அதிமுக கொண்டு வந்திருப்பதாகவும் அந்த உரிமையில் மக்களிடம் வாக்கு கேட்பதாகவும் அமைச்சர் வேலுமணி சூலூர் தொகுதியில் பிரச்சார நிறைவின் போது தெரிவித்தார்.
கோவை சூலூர் அண்ணா சீரணி அரங்கம் முன்பாக அதிமுக வேட்பாளர் கந்தசாமி தனது பிரச்சாரத்தை இன்று மாலை நிறைவு செய்தார்.பிரச்சார நிறைவு நிகழ்ச்சியில் அதிமுக பேச்சாளர் குண்டுகல்யாணம், அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, சூலூர் தொகுதியில்
ஒரு லட்சம் வாக்கு வித்தியாத்தில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி வெற்றி பெறுவார் என தெரிவித்தார். மேலும் அதிமுக வேட்பாளர்
கந்தசாமி உள்ளூர்காரர் எனவும் பொங்கலூர் பழனிச்சாமி வெளியூர்காரர் எனவும் தெரிவித்தார்.
இப்போது திமுகவினர் திண்ணையில் உட்கார்ந்து பேசிகின்றனர் என கூறிய அவர், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்படவும் திமுகதான் காரணம் எனவும் தெரிவித்தார்.
உலக பணக்காரர் பட்டியலில் 10 வது இடத்தில் கலைஞர் குடும்பம் இருக்கின்றது என தெரிவித்த அவர் 70 வயசுக்கு மேல் பேன்ட், சட்டை போட்டுகிட்டு டீக்கடைக்கு நடந்து போகின்றார் எனவும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு இருக்கின்றன, பாலங்கள் கட்டப்பட்டு இருக்கின்றது, அவினாசி அத்திகடவு திட்டத்திற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது, விமான நிலைய விரிவாக்கம் செய்யப்பட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
50 ஆண்டு காலத்தில் செய்யாத வளர்ச்சியை கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆட்சியில் செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
அந்த உரிமையில் நாங்கள் மக்களிடம் வாக்குகளை கேட்கின்றோம் என தெரிவித்த அவர், ஆனால் மக்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை எனவும்,
ஏதாவது மக்களுக்கு செய்து விட்டு திமுக வாக்கு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.திமுக எவ்வளவு பெரிய கட்சி, அது இப்போது ஒரு குடும்ப கட்சியாகி, கம்பெனி கட்சியாகி விட்டது எனவும் தெரிவித்தார்.சூலூரில் விடுபட்ட திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனவும், சூலூரில் உள்ள குளங்கள் தூர் வாரப்படும் எனவும் தெரிவித்த அவர்,
அனைமலையாறு நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.
65 கோடி கடன் தள்ளுபடியால் விசைதறியாளர்கள் பலன் அடைவார்கள் என தெரிவித்த அவர் நெசவு தொழிலாளர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியோ, அமமுக வேட்பாளர் சுகுமாரோ இருவரும் வெளியூர்காரர்கள் எனவும்,
வெளியூர் காரங்களுக்கு ஒட்டு போட்டால் அது செல்லாத ஓட்டாகி விடும் எனவும், எனவே கந்தசாமிக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார். கந்தசாமி உள்ளுர்கார்ர் என்பதால் அவரிடம் பிரச்சினைகளை எளிதாக முறையிட முடியும் எனவும்,19 தேதி காலையிலேயே போய் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி சூலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் அருகே தனது பிரசாரத்தை மாலை 5 மணிக்கே நிறைவு செய்தார்.
அதிமுக வேட்பாளர் கந்தசாமி தனது பிரச்சாரத்தை அறிஞர் அண்ணா சீரணி அரங்கம் மைதானத்தில் மாலை 6 மணிக்கு நிறைவு செய்தார்.
இதேபோல அமமுக வேட்பாளர் சுகுமார் தனது பிரச்சாரத்தை கருமத்தம்பட்டியில் மாலை 5 மணிக்கும், மக்கள் நீதி மையம் வேட்பாளர் மயில்சாமி தனது பிரச்சாரத்தை பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் மாலை 5 மணிக்கும், நாம் தமிழர் வேட்பாளர் விஜயராகவன் தனது பிரச்சாரத்தை செஞ்சேரி மலையில் மாலை 6 மணிக்கும் நிறைவு செய்தனர்.
Video live