அதிமுக பெயரில் இணையதளம் தொடங்கி செயல்பட்டதாகவும், இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி மீது சூலூர் முத்துக்கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவரும், அதிமுக பிரமுகருமான கந்தவேல் சூலூர் காவல்துறையில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் பழனிச்சாமியை கடந்த சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
கே.சி. பழனிச்சாமி மீது கொலை மிரட்டல், மோசடி உள்பட 17 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கேட்டு பழனிச்சாமி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஜாமீன் மனு இன்று சூலூர் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பழனிச்சாமியின் வழக்கறிஞர்கள், அரசியல் ரீதியான பிரச்னைகளுக்காக இந்த வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.
![அதிமுக முன்னாள் எம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-06-admk-person-kcpalanisami-script-7208104_29012020214304_2901f_1580314384_1053.jpg)
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கே.சி.பழனிச்சாமி மீதான வழக்கின் விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும் எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பழனிச்சாமியின் ஜாமீன் மனுவை நீதிபதி வேடியப்பன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.