கோவையில் கரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்டவை காரணமாக இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அப்பெண்ணின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இதனிடையே அப்பெண்ணை இஎஸ்ஐ மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார துறையினர் கண்காணித்துவந்தனர். இந்நிலையில் நேற்றிரவு இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து அப்பெண் தப்பியோடினார். சிங்காநல்லூர் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வரதராஜபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு பெண் தனியாக அமர்ந்திருப்பதை கண்டனர்.
இதையடுத்து, அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பெண்ணின் கையில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதற்கான சீல் இருப்பதை கண்டனர். மேலும் மருத்துவமனையிலிருந்து தப்பியோடி வந்ததும் தெரியவந்தது. அப்பெண்ணை மீட்ட காவல் துறையினர் உடனடியாக மீண்டும் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர்.
இதையும் படிங்க: நிதி அமைச்சர் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை - பி.ஆர். பாண்டியன்