கோயம்புத்தூர்: நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படத்தில் வில்லனாக வரும் நடிகர் ஃபகத் பாசில் ஏராளமான நாய்களை வளர்த்து வருவார். போட்டியில் பங்கேற்கும் நாய்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அதனை வளர்த்து வருவார் ஃபகத் பாசில்.
இந்நிலையில் அப்பகுதியில் நாய் ஓட்டப்பந்தயம் பிரசித்தி பெற்ற ஒரு போட்டியாக நடத்தப்படும் நிலையில், ஒரு நாள் போட்டிக்கு சென்ற ஒரு வளர்ப்பு நாய் தோல்வி அடைந்துவிடும். அனைவரின் மத்தியிலும் தோற்ற அந்த நாய் தன்னை தலைகுனிய வைத்துவிட்டதாக என எண்ணி, அதனை வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்து இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்வது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். அதுபோல் கோவையிலும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் தன்னைக் கடித்ததால் அதனை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று மரக் கட்டையால் அடித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களுடன் கிருஷ்ணகுமாரியின் சகோதரரான விபீஷணன் என்பவர் தங்கி உள்ளார். இந்த நிலையில் இவர்களது வீட்டில் வளர்ந்து வந்த லேபர் வகை நாய், கிருஷ்ணகுமாரியின் மகனை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் விபீஷணன் நாயை மாடியில் கொண்டு சென்று கட்டி உள்ளார். அப்போது அந்த நாய் அவரையும் கடித்ததாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விபீஷணன் அருகில் இருந்த கட்டையை எடுத்து நாயை கொடூரமாக தாக்கியுள்ளார்.
அவர் தாக்கியதில் படுகாயம் அடைந்த நாய் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்துள்ளது. மேலும் நாய் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நாய் கொல்லப்பட்டதை உறுதி செய்து விட்டு சூலூர் காவல் நிலையத்தில் விபீஷணன் மீது புகார் அளித்து உள்ளார்.
தற்போது அந்த புகாரின் பேரில் விபீஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர். வளர்த்த நாய் கடித்ததாக கூறி 'மாமன்னன்' ஃபகத் பாசில் பாணியில் கொடூரமாக தாக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு: 4 சிறுவர்களிடன் இரத்த மாதிரி சேகரிப்பு... விசாரணை நிலை என்ன?