கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு பகுதியில் இருந்து 5 மாத மதிக்கத்தக்க யானைக்குட்டி ஒன்று, தாயிடம் இருந்து பிரிந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் வந்துள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், குட்டியை மீட்டு, லாரி மூலம் ஏற்றிச் சென்றுள்ளனர். அதன்பின், பன்னிமேடு பகுதியில் முகாமிட்டிருந்த யானைக் கூட்டத்தைக் கண்டறிந்து, குட்டியின் மீது மனித வாடை இல்லாமல் இருப்பதற்காக நீரோடைத் தண்ணீரில் குளிக்க வைத்து, பின் தாய் இருக்கும் கூட்டத்திடம் அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வனச்சரகர் மணிகண்டன் கூறுகையில், “வால்பாறையைச் சுற்றி தற்போது அதிக அளவில் யானைக் கூட்டங்கள் உள்ளன. இந்த யானைகள் தோயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு வராமல் இருக்க இரவு, பகலாக வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது பன்னிமேடு பகுதியில் 5 மாத குட்டி யானையை மீட்டு, தாய் இருக்கும் கூட்டத்திற்கு பத்திரமாக சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்து பணியாற்றிய வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்களின் பங்களிப்பு சிறப்பானதாகும். குட்டி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜனவரி வரை நீட்டிப்பு..!