கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள்(97). இவரது மூன்று மகள்கள் மாராத்தாள், லட்சுமி, பாப்பாத்தி. இவர்கள் நால்வரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
இது குறித்த விசாரணையில், முருகம்மாளின் மகன் ரங்கசாமி விவசாய நிலத்திற்கு மின் இணைப்புத் தருவதாகவும், 25 செண்ட் இடத்தை தனது பெயருக்கு மாற்றி கொள்வதாகவும் கூறி 13 ஏக்கர் நிலத்தையும் அவரது பெயருக்கு மாற்றி கொண்டுள்ளார்.
கடந்த 10 மாதங்களுக்கு முன் ரங்கசாமி உயிரிழந்த நிலையில் நிலப்பத்திரத்தை முருகம்மாள் அவரது மருமகள் பாப்பாத்தியிடம் கேட்ட போது பாப்பாத்தி தர மறுத்ததுடன், அவருக்கு உணவளிக்காமலும் இருந்துள்ளார்.
எனவே வாழ பிடிக்காமல் முருகம்மாள் அவரது மூன்று மகள்களுடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
அதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த வடவள்ளி பகுதியை சேர்ந்த பெரியம்மாள்(80) அவரது பேரன் கோபாலகிருஷ்ணன் (எ) கார்த்திக் தனது நிலத்தை அபகரித்து விட்டனர்.
மேலும், பேரனும், அவரது மனைவியும் தனக்கு உணவளிக்காமல் கொடுமைப்படுத்தி வருவதாகவும் எனவே என்னிடம் இருந்து அவன் அபகரித்து பெற்ற சொத்துக்களை மீட்டு தரும்படியும் கார்த்திக் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் மனு அளித்தார்.
மேலும் கணபதி பகுதியை சேர்ந்த மூதாட்டி பங்கஜம்(75) அவரது மகனும் மருமகளும் தன்னை கவனிக்காமல் இருந்து வருவதாகவும் தனது பெயரில் உள்ள வீட்டிற்கு வரும் வாடகை பணத்தைக் கூட தராமல் ஏமாற்றி வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
கோவையில் கடந்த சில மாதங்களாகவே பெற்ற மகனும் மகளும் தங்களை கவனிப்பதில்லை என்று வயதானவர்கள் அதிகமானோர் மனு அளித்து வருவது அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: முதியவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் திருச்சி சரக காவல்துறை!