கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் நிலையம் செயல்பட்டுவருகிறது. முக்கிய இடங்களில் நாள்தோறும் வாகன சோதனை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு போக்குவரத்து உதவி ஆய்வாளர் மருதையா பாண்டியன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்த முருகன் என்ற நபரிடம் வாகனத்தைப் பிடித்துவைத்துக் கொண்டு கையூட்டு கேட்டதாகவும், வாகனத்தைத் தராமல் இரண்டு நாள்களாக அலைக்கழித்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையின் ஏற்பாட்டில் நேற்று (பிப். 4) ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டை, முருகனிடம் கொடுத்து புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உதவி ஆய்வாளரிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர்.
அதன்படி அவர் பணத்தை கொடுக்கும்போது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக மருதையா பாண்டியனையும், அவருடன் இருந்த சக்திவேல் என்பவரையும் கைதுசெய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உதவி ஆய்வாளர் கூறியதன்பேரில் காவலர் சக்திவேல், முருகனிடமிருந்து பணத்தை வாங்கி மருதையா பாண்டியனிடம் கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் மருத்துவப் பரிசோதனை செய்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், சூலூர் நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் முன்னிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போதை மாத்திரை கேட்டு மருந்தக உரிமையாளருக்கு அடி!