தொழில்நுட்பம், ஆச்சரியங்களின் புதையல். இவற்றால் அனைத்தையும் விரல் நுனியில் சாத்தியப்படுத்திவிட முடியும். அதைப் புரிந்து கொண்ட மாணவன் சஞ்சய் குமார்(16) செக்யூர் மெசேஞ்சர் (secure messenger) என்ற ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் தனியார் பள்ளியில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். ஊரடங்கு விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் சஞ்சய் தனது படைப்பார்வத்தை விட்டுவிடவில்லை. வாட்ஸ்அப் போலவே ஒரு செயலியை வடிவமைத்து கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இலவசமாக இச்செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வீடியோ கால், ஸ்டிக்கர், குரூப் சேட், போன்ற பல்வேறு வசதிகளை இதில் இணைத்துள்ளார். இதைப் பயன்படுத்த 152 நாடுகளில் அனுமதி கிடைத்துள்ளது. இது தொடர்பாக சஞ்சய் குமாரிடம் பேசினோம். இதனை வடிவமைக்க 45 நாட்கள் ஆனதாகவும், இந்த செயலியின் மூலம் வெளிநாடுகளில் விபிஎன் இல்லாமல் வீடியோ கால் செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், ”எனது பெற்றோரும், ஆசிரியர்களும் தான் இதற்கு உறுதுணையாக இருந்தனர். இந்த செயலியில் குரூப் சாட்டிங்கில் பல்வேறு நபர்களை இணைத்துக்கொள்ளலாம். வீடியோ அழைப்பில் பலரை இணைப்பதற்கான வசதிகளை கூடிய விரைவில் செய்வேன். இதே போல், கோப்புகளையும் எத்தனை எம்பியாக (MB) இருந்தாலும் பகிர்ந்து கொள்ள முடியும்.
நாள்தோறும் ஒரு verify pin கேட்கும்படி செய்துள்ளேன். குறிப்பாக வாடிக்கையாளர் பாதுகாப்புக்கென தனியாக ஒரு சர்வரைத் தொடங்கியிருக்கிறேன். இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படும்” என்றார்.
மேலும், செயலியில் ஏதேனும் குறைகள் இருந்தால் உதவி (help) என்ற ஆப்ஷன் மூலம் தெரிவித்தால் உடனடியாக சரி செய்து விடுவதாக உற்சாகமாகத் தெரிவிக்கிறார் சஞ்சய். ஊரடங்கு விடுமுறை தான் தனது வடிவமைப்புக்கு முக்கிய காரணம் என புன்னகைக்கும் சஞ்சயின் முயற்சிகள் மேன்மேலும் தொடரட்டும்.
இதையும் படிங்க:பழைய பொருட்களில் ப்ளூடூத் ஹெட்செட் வடிவமைத்து அசத்திய மாணவன்!