கோயம்புத்தூர் மாவட்டம் வேடபட்டி அருகேயுள்ள நாகராஜபுரம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்துவருகின்றனர். இவர்களில் ஆண்கள் ஜோதிடம் பார்க்கும் பணி செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இவர்களது சமுதாயத்தில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அந்த வகையில் திருமண வயதுடைய இளம் ஆண், பெண் என இருபாலருக்கும் ஊரின் தலைவர் தலைமையில் திருமணம் நடைபெறும். இந்தத் திருமண நிகழ்ச்சி ஊரின் மையப்பகுதில் பந்தல் அமைத்து பத்து நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறும். திருமண தாலி கட்டும் நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரவு 12 மணிக்கு ஒரு திருமண நிகழ்வு நடக்கவிருந்த நிலையில், இவர்களது சமூகத்தைச் சார்ந்த ஒருவர் காவல் துறையின் அவசர எண் 100-க்கு தொடர்புகொண்டு திருமண வயது பூர்த்தி ஆகாத சிறுமிக்கு திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் வடவள்ளி காவல் துறையினர், குழந்தைகள் நலவாரியம், சமூக நலத் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அனைத்து ஆதாரங்களும் சரியாக இருந்ததால் திருமணம் நடத்த ஒப்புதல் அளித்தனர். ஆனால், அதே பகுதியில் 13 வயதுடைய பெண்ணிற்கும் திருமண நடக்க இருப்பதையறிந்த அலுவலர்கள் சிறுமியின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அதில், நிச்சயம் நடைபெற்றது உண்மை. ஆனால் திருமணம் 6 ஆண்டுகள் கழித்துதான் நடைபெறும் இப்போது திருமணம் இல்லை எனச் சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோரை திங்கள்கிழமை சமூக நலத் துறை அலுவலகம் வந்து இது குறித்து கடிதம் எழுதி தரச் சொல்லி அலுவலர்கள் எச்சரித்து சென்றனர். இதனால் நாகராஜபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கோவையில் தொடரும் சந்தன மரத் திருட்டு - திணறும் காவல் துறை!