கோயம்புத்தூர், சுந்தராபுரம் பகுதியில் தாயை இழந்த 11 வயது சிறுமி தந்தை, அத்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றார்.
தந்தை, அத்தை ஆகியோர் கூலி வேலைக்குச் செல்லும் நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் சிறுமி, கீழ் வீட்டில் தொலைக்காட்சியைப் பார்க்கச் செல்வது வழக்கம்.
கீழ் விட்டில் இருக்கும் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனின் பெற்றோரும் வேலைக்குச் செல்லும் நிலையில், அங்குள்ள மாணவர் மட்டும் வீட்டில் இருந்து வருகின்றார்.
ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்த நிலையில் அதில் ஆபாச படங்களை அம்மாணவர் பார்த்து வந்துள்ளார். மேலும் 11ஆம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவரையும் வீட்டிற்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் மே 20ஆம் தேதி கீழ் வீட்டிற்கு தொலைக்காட்சியைப் பார்க்க வந்த சிறுமியை கட்டாயப்படுத்தி, மாணவர்கள் இருவரும் ஆபாசக் காட்சிகளை பார்க்க வைத்து, பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்ந்து வந்த நிலையில், மேலும் ஒரு 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனையும் அழைத்து, மூவரும் சேர்ந்து சிறுமியைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில் 11 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை அரசு மருத்துவமனைக்கு தந்தையும், அத்தையும் அழைத்துச் சென்றனர்.
அவரைப் பரிசோதித்த போது சிறுமி, தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இது குறித்து மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரித்த போது, சிறுமி நடந்த சம்பவங்களைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மருத்துவர்கள் காவல் துறைக்குத் தெரிவித்தனர். சிறுமியிடம் புகார் பெற்ற கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் 3 பள்ளி மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
அதில் 2 பள்ளி மாணவர்களை கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்த காவல்துறையினர், தலைமறைவாக இருக்கும் மற்றொரு மாணவரைத் தேடி வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோர் வாங்கிக் கொடுத்த ஸ்மார்ட்போன் அவர்களுக்கே வினையாக முடிந்துள்ளது சக பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், 'மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு நடக்கும்போது மட்டுமே செல்போன் பயன்படுத்த பெற்றோர் அனுமதிக்க வேண்டும்.
அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும். மாணவர்கள் கையில் ஸ்மார்ட்போன் கொடுக்கும்போது, அதை எவ்வாறு பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது குறித்து தெரிந்து இருக்க வேண்டும்' எனக் கூறினர்.