மத்திய அரசின் திட்டமான போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாதம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளச்சியில் தெற்கு ஒன்றிய சமூகநலத் துறையின் கீழ் செயல்படும், வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் பங்கேற்ற சிறுதானிய உணவுக் கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது.
இதில், 97 அங்கன்வாடிகளைச் சேர்ந்த பணியாளர்கள் கம்பு சேமியா, ராகி புட்டு, எள் உருண்டை, குதிரைவாலி பொங்கல், சுண்டல், பாசிப்பயிறு பாயசம், நிலக்கடலை லட்டு, கொள்ளு சுண்டல் உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கண்காட்சியில் வைத்திருந்தனர். மேலும், அங்கன்வாடி பெண் பணியாளர் ஒருவர் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட ‘ஊட்டச்சத்து பாப்பா’ வேடம் அணிந்து வந்து மாணவிகளிடம் காய்கறிகளில் உள்ள சத்துகள் குறித்து விளக்கினார்.
இதையடுத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பிரேமா ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் பேசும்போது, "நமது முன்னோர்கள் உட்கொண்ட சிறுதானிய உணவுகளை மறந்து, ருசிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்கின்றோம்.
இதனால், ஊட்டச்சத்து பற்றாக்குறை உயரத்துக்கு ஏற்ற எடையின்மை, ரத்த சோகை, வயதுக்கு ஏற்ற உயரமின்மை போன்றவையால் பாதிப்பு அடைகிறோம். எனவே, இளம்பருவத்திலுள்ள மாணவ மாணவியர் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பருப்பு, பழங்கள், சிறுதானிய உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:
ஊட்டச்சத்து திட்டம் - மூன்று விருதுகளை அள்ளிய தமிழ்நாடு!
உண்ணும் உணவே நீங்கள்? உண்மை சொல்லும் தேசிய ஊட்டச்சத்து வாரம்!