சென்னை: சென்னையைச் சேர்ந்த விகாஷ் என்பவர் சொமெட்டோ மூலம் நேற்று (அக்.18) உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவு டெலிவரியில் ஏற்பட்ட தவறு குறித்து புகார் அளித்து பணத்தைத் திருப்பி அளிக்க கேட்டு சொமெட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியுள்ளார்.
அப்போது வாடிக்கையாளர் சேவை மைய முகவர் ஒருவர், "உங்கள் புகார் குறித்து உணவகத்தைத் தொடர்புகொண்டோம், மொழி தெரியாததால் உங்களது பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை எனக் கூறியும் இந்தி நமது தேசிய மொழி. அதனால், ஒவ்வொருவருக்கும் ஓரளவாவது கண்டிப்பாக இந்தி தெரிந்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
கண்டனம்
இந்த உரையாடல் பதிவை விகாஷ் ட்விட்டரில் பதிவிட #Reject_Zomato என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி பலரும் கண்டனம் தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து விமர்சித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டுவருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை" என்று அழுத்தமான தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இதையடுத்து இன்று (அக்.19) செமெட்டோ நிறுவனம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை முகவரை பணிநீக்கம் செய்தும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் விகாஷிடம் மன்னிப்பு கூறி தமிழில் அறிக்கை வெளியிட்டது.
தமிழர்களின் மரபு சுயமரியாதையே
இந்நிலையில் விகாஷ் தனது ட்விட்டரில், வாடிக்கையாளர் சேவை முகவர் பணிநீக்கம் செய்யப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள், பணிநீக்கம் செய்யாமல் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காதவாறு முகவருக்கு பயிற்சி அளியுங்கள், தமிழர்களின் மரபு சுயமரியாதையே தவிர பழிவாங்குதல் அல்ல என்று சொமெட்டோ நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
அறியாத செய்த தவறு
சொமெட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல், வாடிக்கையாளர் சேவை முகவர் ஒருவர் அறியாத செய்த தவறு தேசிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. மற்றவர்களின் குறைகளை பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு இன்னும் சகிப்புத்தன்மை தேவை. முகவரை மீண்டும் பணியமர்த்துகிறாம். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல அவருக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்கள். பிராந்திய மக்களின் உணர்வுகளையும், மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளும் அளவிற்கு யாரும் நிபுணர்கள் அல்ல நான் உள்பட.
மற்றவர்களுடைய மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழ்நாட்டை நாங்கள் நேசிக்கிறோம்"என்று தெரிவித்துள்ளார்.
சொமெட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்தாலும், இந்தப் பிரச்சினை விவாதத்திற்குள்ளானதாகவே உள்ளது. ஏனெனில் மொழி ஆதிக்கத்தை மற்றவர்கள் மீது திணிப்பதாக உள்ளது.
ஹிந்தியை திணிக்க அனுமதிக்க மாட்டோம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, " இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியாவில் தேசியமொழி என்று எதுவும் இல்லை. அலுவல் மொழிகள் மட்டுமே உண்டு. இந்தியாவின் 22 அலுவல் மொழிகளில் ஹிந்தியும் ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி உண்டு
அதுவே அந்தந்த மாநிலத்தின் தொப்புள்கொடி அடையாளம். நமது அனைத்து மொழிகளையும் கொண்டாடுவோம். நமது பெருமைமிகு வேற்றுமையில் ஒற்றுமையை மதிப்போம். ஆனால் ஹிந்தியை எங்கள் மீது திணிக்க அனுமதிக்க மாட்டோம் " என்று ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழர்களுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை - கனிமொழி