சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்தவர் ஜெயசூர்யா (26). இவர் குரமன் நகரில் தங்கி தனியார் செல்போன் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று (டிச.04) ஜெயசூர்யா கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது நண்பர் பிரேம்குமார் (28) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு நள்ளிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஜவஹர்லால் நேரு 100 அடி சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலை தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. சுமார் 100 மீட்டர் தூரம் சென்டர் மீடியனில் தேய்த்தபடியே சென்று மேம்பாலத்தின் தூணில் மோதியுள்ளனர்.
இதில் ஜெயசூர்யா, பிரேம்குமார் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், உயிரிழந்த இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரு வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!