சென்னை: அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர், சங்கரி. இவரது மூத்த மகன் ஹரிஷ் (25) கார்பெண்டராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் (மார்ச் 5) இரவு அபிராமபுரம் காமராஜர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தனது நண்பர்களுடன் ஹரிஷ் உணவருந்திவிட்டு தகராறு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் உணவக ஊழியர்கள் கொடுத்த தகவலின்படி அபிராமபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இளைஞர் தற்கொலை
அப்போது ஹரிஷ் உடன் இருந்த நண்பர்கள் சென்றுவிட்டனர். இதனால் ஹரிஷை மட்டும் விசாரணைக்கு காவல் துறையினர் அழைத்துச்சென்றனர். சிறிது நேரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு, அவரை அனுப்பிவிட்டதாகவும் வீட்டிற்குச்சென்ற ஹரிஷ் நள்ளிரவில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிகிறது.

காவலர்கள்தான் காரணம்
அவரது சடலம் உடற்கூராய்வு செய்வதற்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளநிலையில், ஹரிஷின் மரணத்திற்கு அபிராமபுரம் காவல் துறையினரின் துன்புறுத்தலே காரணமென குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் காவல் துறையினரிடம் கேட்டபோது, "உயிரிழந்த ஹரிஷ் உணவகத்தில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கொடுக்காமல் தனது செல்போனை வைத்துக்கொள்ளுமாறு கூறியதால் இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தது உண்மைதான். ஆனால், அவரை தாக்கவில்லை. அவர் போதையில் இருந்ததால் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு அனுப்பிவிட்டோம்.

போதை பழக்கங்களுக்கு அடிமை
ஹரிஷ் கஞ்சா உள்ளிட்டப் போதை பழக்கங்களுக்கு அடிமையானவர். இரண்டுமுறை போதை மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்றவர்" என்றனர்.
இதைத்தொடர்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174-ன் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 7) காலை கிண்டி ஆர்டிஓ யோக ஜோதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்துபோன ஹரிஷின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.
இதையடுத்து அபிராமபுரம் காவல் நிலையத்திற்குச்சென்று அப்போது பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் நாட்டிலேயே முதல்முறையாக சர்வதேச அறைகலன் பூங்கா: இதிலுள்ள முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?