பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் 4 நபர்கள் சுற்றித்திரிவதாக அடையாளம் தெரியாத நபர் மூலம் நேற்று (நவ-2)மாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரயில் நிலைய ரயில்வே போலீசாருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்குச்சென்ற ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையினர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில் கிடைத்த தகவல் உண்மையில்லை என்பது தெரியவந்ததை அடுத்து, அழைப்பு விடுத்த நபர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சதீஷ் குமார் என்பவரின் பெயரில் இருந்தது. பின்னர் சதீஷ் குமாரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது விமான நிலையத்தில், சுங்கத்துறையில் பணியாற்றி வந்த குபேந்திரனுக்கு சிம்கார்டு வாங்கிக்கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து குபேந்திரனைப் பிடித்து விசாரித்தபோது, அவரது மகன் அம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த பிரவீன் (எ) பரத் குமார் (24) என்பவர் போலீசாருக்குப்போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. உடனடியாக பிரவீன் வீட்டிற்குச்சென்று அவனை பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், கஞ்சா போதைக்கு அடிமையான பிரவீன், தன்னை யாரோ துரத்துவதுபோல், தானே கற்பனை செய்துகொண்டு, தனது பெற்றோரிடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று(நவ-2) நண்பர்களுடன் கோவா சென்றுவிட்டு வந்த பிரவீன், அதேபோல கஞ்சா போதையில் தனது தந்தையிடம் தன்னை 4 நபர்கள் கத்தியுடன் துரத்துவதாகக்கூறியதால், ஆத்திரமடைந்த அவனது தந்தை பிரவீனை திட்டி அனுப்பியுள்ளார். இதனை அடுத்து தந்தை திட்டிய ஆத்திரத்தில் பிரவீன் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை அழைத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
பிரவீனை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமீனில் விடுவித்து, அவரது பெற்றோரை வரவழைத்து, பிரவீனுக்கு உரிய மருத்துவ உதவி அளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:பிரியாணி ஆர்டர் கொடுப்பதுபோல் நடித்து ரூ.25ஆயிரத்தை அபேஸ் செய்த மகாதிருடன்