சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நிஷாந்த் (24), திமுக இளைஞர் அணி தலைமையகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் அஃப்ரின் என்ற பெண்ணுடன் காதல் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று(பிப்.17) நிஷாந்த் பணியை முடித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். பிறகு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, காசி தியேட்டர் அருகே போலீசாரின் வாகன சோதனையில் நிஷாந்த் சிக்கியுள்ளார். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நிஷாந்த்தை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற நிஷாந்த் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தனது மனைவியிடம் கூறி புலம்பியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நிஷாந்த், மனைவி உறங்கிய பிறகு தற்கொலை செய்து கொண்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அஃப்ரின் எம்ஜிஆர் நகர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த நிஷாந்த்தின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதால் நிஷாந்த் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியை காதல் திருமணம் செய்தவர் போக்சோவில் கைது!