சென்னை: திண்டுக்கல்லைப் பூர்விகமாகக் கொண்டு சென்னை சூளைமேடு கில்நகர் 2ஆவது தெருவில் வசித்துவருபவர் பழனிகுமார். ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.
இந்நிலையில், இவர் வீட்டின் முன்பு நேற்று (செப். 10) காலை வந்த இளைஞர் ஒருவர் பெட்ரோலை தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டார். பின்னர் இதைக்கண்ட பழனிகுமார், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக அந்த இளைஞரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்.
அங்கு அவருக்குத் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டுவந்த நிலையில், அது பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சூளைமேடு காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (30) என்பதும், இவரிடம், பழனிகுமார் 2019ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக 23 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்ததும் தெரியவந்தது.
தொடர்ச்சியாக, பழனிகுமாரிடம் இளைஞர் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுவந்த நிலையில், 13 லட்சம் ரூபாயை மட்டும் பழனிகுமார் திருப்பியளித்ததும், மீதமுள்ள பத்து லட்ச ரூபாயை கொடுக்காததால், இளைஞர் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
விசாரணையில் கண்டறியப்பட்ட தகவலின் அடிப்படையில், பழனிகுமார் மீீது சூளைமேடு காவல் துறையினர், தற்கொலைக்குத் தூண்டுதல், மோசடி என இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.
மேலும், தலைமைச் செயலக மின்சார வாரிய அலுவலர்களிடம் பணம் கொடுத்ததாக பழனிகுமார் குறிப்பிட்ட தகவலை வைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: விருதுநகர் வெடி விபத்து: ஆட்சியர் ஆய்வு, 9 பேர் மீது வழக்கு