சென்னை: ராயபுரம் கல் மண்டபம் அருகே நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்ற போது அவர்கள் தப்பி ஓடி உள்ளனர். ஆனால் அவர்கள் கையில் வைத்திருந்த பை ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது.
அந்தப் பையில் செல்போனுக்கு ஒட்டக்கூடிய டெம்பர் கிளாஸ் மற்றும் ஒரு நோட்டு இருந்துள்ளது இதனால் சந்தேகமடைந்த போலீசார், உடனே அதற்கு அடுத்த காசிமேடு சிக்னலில் நிற்கக்கூடிய போலீசாருக்கு வாகன எண்ணை அனுப்பி பிடிக்க கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிய மூவரையும், காசிமேடு சிக்னலில் போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர். அதனைத் தொடர்ந்து ள் மூன்று பேரையும் ராயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தண்டையார்பேட்டை புது வினோபா நகரை சேர்ந்த ஜாகிர் உசேன்(20), நவாஸ் (19) மற்றும் நாகூர் மீரான் (22) என்பது தெரியவந்தது. இந்த மூன்று இளைஞர்களும் பர்மா பஜாரில் உள்ள பிளாட்பார்மில் செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் ஒட்டும் தொழிலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் போலீசார் கைப்பற்றிய நோட்டு புத்தகம் நாகூர் மீரானுக்கு சொந்தமானது என்பதும், நாகூர் மீரான் இந்தியன் நேஷ்னல் லீக் அமைப்பில் உறுப்பினராக இருந்து வருவதும் தெரியவந்தது. முஸ்லீம் தலைவர்களின் பேச்சுக்களை நாகூர் மீரான் நோட்டில் எழுதி வைத்திருப்பதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தில் தண்டையார்ப்பேட்டை பட்டேல் நகர், நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அவர்களது வீட்டில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் நாகூர் மீரான் செல்போனில் அடிக்கடி பழனி பாபாவின் பேச்சுக்களை கேட்டு, அதில் ஈர்க்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நாகூர் மீரான் மீது பொதுமக்களுக்கு அல்லது பொதுமக்களின் எந்தவொரு பிரிவினருக்கும் பயம் அல்லது எச்சரிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல், இரு வகுப்புகளுக்கு இடையே பகை, வெறுப்பு உருவாக்கும் அறிக்கைகள் வைத்திருத்தல், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இரண்டு பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.