சென்னை: சென்னை கிழக்கு தாம்பரம், ரங்கநாதன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்னேகா(19). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பனையூரைச் சேர்ந்த பிரமோத் (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. வரதட்சணையாக 15 சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பெண்ணின் பெற்றோர் கொடுத்துள்ளனர்.
திருமணமான தொடக்கம் முதலே மாப்பிள்ளை வீட்டார் கூடுதலாக வரதட்சணை கேட்டு ஸ்னேகாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அண்மையில், பிரமோத், ஸ்னேகாவை அடித்ததில், ஸ்னேகா காயமடைந்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு கடந்த மாதம் ஸ்னேகா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்து ஸ்னேகாவை செல்போனில் தொடர்பு கொண்டு பிரமோத் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த 1ஆம் தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த சேலையூர் காவலர்கள் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்தான் தனது மகள் ஸ்னேகா தற்கொலை செய்துகொண்டதாக பெண்ணின் தந்தை ரவி (43) சோலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ஸ்னேகாவின் கணவர் பிரமோத், மாமனார் சண்முகம் ஆகிய இருவரும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: காவலர்களை கடித்து தப்ப முயன்ற கஞ்சா விற்பனையாளர்கள் கைது