புரெவி புயல் காரணமாக சென்னையில் நேற்று (டிச. 03) முதல் கனமழை பெய்துவருகிறது. இதனால் தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோயில் தெரு வழியாக இன்று (டிச. 04) நடந்துசென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டார். காலணி இல்லாமல் அவர் நடந்துசென்றதால் விபத்து ஏற்பட்டது.
அந்தச் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்ததால் இளைஞரைக் காப்பாற்ற முடியவில்லை எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். மயக்க நிலையில் இருந்த இளைஞரை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.
விசாரணையில் உயிரிழந்தது காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மீனவர் சுரேஷ் என்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த தண்டையார்பேட்டை காவல் துறையினர் சுரேஷின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: புரெவி புயல்: வெளுத்து வாங்கும் மழையால் சென்னையில் தேங்கிய மழைநீர்!